Thursday, September 4, 2014


மகான்களின்  பார்வை:



ஒன்றுக்கும் உதவாதவர் என்று கரித்து கொட்டப்பட்டவர்களும் தம்மை சேர்ந்தவரே என்பதை புரியவைத்த அன்பு, எளிமை தெய்வம் நம் பெரியவா.
 "ஐ க்யு" போதாத ஒரு பிள்ளையாண்டான், ஊரில் நல்லபடி வாழ முடியாமல், எப்படிப்பட்டவராக இருந்தாலும், சரணாலயமாக விளங்கும் பெரியவாளிடம் வந்து சேர்ந்து, மடத்தில் கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருந்தான்.

ஒருநாள், அவனுடைய ஊர் பிரமுகர் பெரியவா தரிசனத்துக்கு வந்துவிட்டு அவனை பற்றி பெரியவாளிடமே குறை கூறினார் " கால் காசுக்கு பிரயோஜனமில்லாதவன் ! வெறும் குப்பை! ஊர்ல குப்பை கொட்டியாச்சு! இப்ப இங்க மடத்துல வந்து குப்பை கொட்டறானாக்கும்" என்றார். பெருமாளிடம் அவனது கிங்கரரை பற்றி பெரிய பிராட்டியே குறைசொன்னாலும், அவன் தாங்க மாட்டானென்று பெரியாழ்வார் பாடி வைத்ததை இன்று பெரியவா மெய்யாக்கினார். "ஒன் குத்தபத்திரிகைக்கு காரணம், ஒன்னை அவன் உபசாரம் பண்ணி வரவேத்து, என் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தாததுதானே!" என்று செமை தூக்கலாக தூக்கி எறிந்தவர், நமக்கு பிடிபடாத தம்முடைய ஆழ அகலங்களில், ஒரு நெஞ்சுருக்கும் பகுதியை திறந்து காட்டி, அந்த பிரமுகரை ஒரு பிடி பிடித்தார்.

"குப்பைன்னுதானே சொன்னே! நீங்கள்ளாம் சுத்தம் பாக்கற பெரிய மனுஷா. அதனால குப்பை-கூளம் ஒங்களுக்கு ஒதவாதுதான். ஆனா லோகம்னு இருந்தா குப்பை கூளமும் இருக்கத்தானே செய்யும்? அதை கொட்டி வெக்கவே குப்பை தொட்டின்னும் இருக்கத்தானே இருக்கு? நான்தான் அந்த குப்பை தொட்டி. ஒங்களுக்கு தேவைப்படாத குப்பையும் கூளமும் எனக்கு தேவைதான்" "தோ! பாரு! குப்பைலையும் ஒங்க மாதிரி சுத்தம் பாக்கறவாளுக்கு இஷ்டமானது கெடைக்கும், தெரியுமோ? இந்த மடத்து குப்பை குழிலேந்துதான் ஒரு பரங்கி கொடியும், பூஷணி கொடியும் மொளச்சு, ஒன் மாதிரி சுத்தக்காராளும், "இந்த மாதிரி டேஸ்ட் சாப்பிட்டதே இல்லைன்னு" சந்தோஷமா சாப்டுட்டு போய்ண்டே இருக்கா. தெரிஞ்சுக்கோ! குப்பையிலேதான் "குருக்கத்தி"ன்னு ஒசந்த ஜாதி புஷ்பம் பூக்கறது. "குப்பைமேனி"ன்னு மூலிகையே இருக்கு தெரிஞ்சுக்கோ. குப்பையை கிளறாதேங்கறாளே அதைத்தான் சொல்றேன். கிளறினா பூச்சியும், புழுவும் வந்து பிடுங்கும். இப்ப நீ குப்பையை கிளறினதாலதான், நான் ஒன்ன பிடுங்கறேன்?”

பிரமுகர், பெரியவாளின், ருத்ரமுகம் தாங்காமல், மன்னிப்பு கேட்டார். தன் கிங்கரரை பற்றி சொன்னதை தாங்காமல், தன்னையே குப்பை தொட்டி என்று சொல்லிகொண்டதில்தான் எத்தனை எளிமை, வாத்சல்யம், உட்பொருள்!

No comments:

Post a Comment