Thursday, September 4, 2014

Om Namashivaya

 
 
 
 
 
 
4 Votes



காஞ்சிப்பெரியவரைச் சந்திக்க ஒரு தனவணிகர் காஞ்சிபுரம் மடத்திற்கு வந்திருந்தார். அவரது குடும்பம் நல்ல செல்வச்செழிப்புடன் இருந்தது. வணிகரின் முன்னோர் தானதர்மம் செய்து வாழ்ந்தவர்கள். தங்கள் ஊரில் சிவன்கோயில் ஒன்றைக்கட்டி நித்யபூஜைக்காக நிலபுலன்களை எழுதி வைத்திருந்தனர். ஆனால், வணிகரோ இஷ்டம் போல ஆடம்பரமாய் வாழ்ந்து சொத்துக்களை விற்றுத் தீர்த்துவிட்டார். அவருடைய உடல்நிலையும் பாதிப்புக்குள்ளானது. அவரது மகனுக்கு குழந்தையும் இல்லாமல் போனது. அதை எண்ணி வருந்தியபடியே காஞ்சிப் பெரியவர் முன் வந்து நின்றார். அவர் சுவாமிகள் அவருடைய பேச்சைக் கேட்டபடியே, மற்ற பக்தர்களுக்கு பிரசாதம் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
சிறிதுநேரம் மவுனம் காத்த பெரியவர், “”உங்கள் குடும்பவழியில் ஒரு சிவன் கோயில் இருக்குமே?” என்று சுவாமிகள் கேட்டார். “”ஆமாம்! சுவாமி! சிவன் கோயில் இருந்தது. ஆனால் இப்போது அக்கோயிலை நாங்கள் கவனிப்பதில்லை,” என்று சற்று தயக்கத்துடன் கூறினார். ””அப்படியா! சிவனுக்காக விடப்பட்ட சொத்தை நீ எடுத்துட்டே! அதனால தான் நீ இப்போ வாரிசு கூட இல்லாமல் தத்தளிக்கிறே! இதுக்கு என்னால என்ன செய்ய முடியும்?” என்று அவருடைய தவறைச் சுட்டிக்காட்டினார்.
தனவணிகர் பெரியவரிடம்,””சுவாமி! எங்க குடும்பம் நல்ல பாரம்பரியமான குடும்பந்தான்! சிவனுக்காக எங்கள் முன்னோர் பல சேவைகளை பெரும் செலவில் செஞ்சிருக்காங்க. ஆனால், இப்போ பரம்பரைச் சொத்து ஒன்றும் என்னிடத்தில் இல்லை. எல்லாம் என் கையை விட்டுப் போய் விட்டது. சிவன் கோயிலையும் மறந்துட்டேன்,” என்றார் உருக்கமாக. அவரையும் அறியாமல் அவர் கண்களில் கண்ணீர் பெருகியது.
“”நீ இப்போ சொல்றது பெரிய தப்பு. உங்க வீட்டுப் பெரியவங்க காலையில் குளிச்சா நெற்றியில் திருநீறிட்டு “நமசிவாய’ என்று மந்திரம் சொல்லி சிவவழிபாடு செய்தவர்கள். அந்தச்சொத்து எந்தக் காலத்திலும் உனக்கும் பலன் கொடுக்கும். நீ அந்த மந்திரத்தை விடாமல் ஒருநாளைக்கு ஆயிரம் தரம் ஜபம் செய். எல்லாம் சரியாகிவிடும்,” என்று சொல்லி மனப்பூர்வமாக ஆசிர்வாதம் செய்து பிரசாதம் கொடுத்தார்.
தனவணிகரும் விடாமல் சிவபூஜையில் ஈடுபட்டு வந்தார். மூன்றாண்டுகள் தொடர்ந்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்துவந்தார். அவருடைய நோய் தீர்ந்தது.
மகனுக்கு ஒரு ஆண்பிள்ளையும் பிறந்தது. பிள்ளைக்கு “”நமச்சிவாயம்” என்று பெயரிட்டார் தனவணிகர். பண்புள்ள குழந்தையாக வளர்ந்த நமச்சிவாயம் படித்து டில்லியில் மத்திய அரசுப்பணியில் பணியாற்றி வந்தார்.
நமச்சிவாயமும் தங்கள் குலசொத்தான சிவனுக்கு பூஜை செய்ய மறந்ததில்லை. இப்போது நம்நாட்டின் சார்பாக இங்கிலாந்தில் அவர் பணியாற்றுகிறார். துன்பத்தின் விளிம்பில் இருந்த தனவணிகர் குடும்பம் மீண்டும் தழைக்க காஞ்சிப்பெரியவரின் வழிகாட்டுதலே தக்க துணையாய் அமைந்தது.
 நன்றி :sage  of  kanchi

No comments:

Post a Comment